தேனியில் உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்':நகராட்சி ஆணையர் எச்சரிக்கை


தேனியில் உரிமம் பெறாத கடைகளுக்கு சீல்:நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 July 2023 6:45 PM GMT (Updated: 12 July 2023 11:52 AM GMT)

தேனியில் உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

தேனி

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் -1998 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் -2023, கடந்த 13.4.2023 முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவு 102 மற்றும் விதிகள் எண்-289-ன்படி தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் மின்சாதனம், ஜவுளி, மின்னணு பொருட்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்கள் விற்பனை கடைகள்.

ஜெராக்ஸ், ஸ்டிக்கர் கடைகள், அனைத்து விதமான உணவுப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை கடைகள், மின்சக்தி மற்றும் ஜெனரேட்டர் பயன்படுத்தி தொழில் நடத்துபவர்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் என அனைத்து விதமான வர்த்தகங்களும் நகராட்சியில் உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உரிமம் பெற்றுள்ளவர்கள் தொழில் உரிமங்களை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். எனவே நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்கள், தொழில் கூடங்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொழில்வரி மற்றும் உரிம கட்டணங்களை நிலுவையின்றி செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உரிமம் பெறாத கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படும். மேலும் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story