கனியாமூரில் கலவரம் நடந்த பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை பொது இடங்களில் போட்டுச் செல்லும் மக்கள்


கனியாமூரில் கலவரம் நடந்த பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை பொது இடங்களில் போட்டுச் செல்லும் மக்கள்
x

மாணவி ஸ்ரீமதி இறந்ததால் வெடித்த கலவரத்தின் போது கனியாமூர் பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை பொது இடங்களில் பொதுமக்கள் போட்டு செல்கிறார்கள். அந்த பொருட்களை போலீசார் சேகரித்து குவித்து வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கடந்த 17-ந்தேதி நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

அப்போது, பள்ளியை சூறையாடி தீ வைத்த கலவரக்காரர்கள், அங்கு வகுப்பறைகளில் இருந்த இருக்கைகள், மேஜைகள் மற்றும் ஏர்கூலர், ஏ.சி.எந்திரங்கள் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள நிர்வாகியின் வீட்டில் இருந்த பொருட்களையும் எடுத்து சென்றுவிட்டனர். மேலும் அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த மாடுகள், கோழி உள்ளிட்டவற்றையும் ஓட்டி சென்றனர்.

தண்டோரா போட்டு எச்சரிக்கை

இந்தநிலையில், கலவரத்தில் சூறையாடப்பட்ட பள்ளியில் இருந்த பொருட்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு பகுதியாக கடந்த 20-ந்தேதி பள்ளியை சுற்றிலும் அமைந்துள்ள கிராமங்களில் தண்டோரோ போட்டு, கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை பள்ளியிலேயே போட்டுவிட வேண்டும், இல்லையெனில் பொருட்கள் வைத்திருக்கும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குவித்து வைக்கப்பட்டுள்ள இருக்கைகள்

இதையடுத்து நேற்று முன்தினம் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள், கலவரத்தின் போது பள்ளி நிர்வாகி வீடு பகுதியில் கிடந்த 4 பவுன் தங்க தோடுகளை எடுத்து சென்றதாக கூறி சின்னசேலம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதேபோன்று, ஈசாந்தை கிராமத்தில் உள்ள ஏரியிலும் ஏராளமான இருக்கைகளை மக்கள் போட்டு சென்றனர். இதையும் சின்னசேலம் போலீசார் கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து அந்தந்த பகுதியில் உள்ள கிராமத்தின் சாலை ஓரம், பொது இடங்களிலும், போட்டு வருகின்றனர். இவற்றை போலீசார் சேகரித்து போலீஸ் நிலையத்தில் வைத்து வருகிறார்கள். இதனால் போலீஸ் நிலையத்தில் தற்போது மலை போல் இருக்கைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.


Next Story