கிணத்துக்கடவில் புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் திணறல்-விபத்து அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கிணத்துக்கடவில் புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள். மேலும் விபத்து அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள். மேலும் விபத்து அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சாலை அகலப்படுத்தும் பணி
கிணத்துக்கடவிலிருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையானது லட்சுமி நகர், கொண்டம்பட்டி, வடசித்தூர், பெரிய களந்தை, மெட்டுவாவி, காட்டம்பட்டி, பல்லடம், திருப்பூர், செஞ்சேரிமலை, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.
இந்த சாலை வழியாக தினசரி காலை மாலை நேரங்களில் அரசு பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை கடந்த சில மாதத்திற்கு முன்பு லட்சுமி விநாயகர் பகுதியில் இருந்து வடசித்தூர் வரை அகலப்படுத்தும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புழுதி பறக்கிறது
ஆனால் கிணத்துக்கடவு ரெயில்வே மேம்பால பகுதியில் இருந்து லட்சுமி நகர் வரை சிறிது தூரத்திற்கு உள்ள பழுதடைந்த சாலையை சரி செய்யும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கியது. முதல் கட்டமாக ரெயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் குண்டும்- குழியுமாக காணப்பட்ட சாலை பொக்லைன் எந்திரம் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டு சமன்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
ஆனால் இடைப்பட்ட தூரத்தில் உள்ள இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் மற்ற பகுதிகளில் சாலை விஸ்தரிப்பு பணி நடைபெறுகிறது. ஆனால் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து லட்சுமி நகர் செல்லும் குறிப்பிட்ட தூர சாலை சீரமைக்க படாமல் இருப்பதால் புழுதி பறக்கிறது. அதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி திணறி வருகின்றனர். மேலும் விபத்துகளும் நடக்கிறது. ஆகவே நெடுஞ்சாலை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.