கோவில்பட்டி வட்டார விளையாட்டு போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாம்பியன்
கோவில்பட்டி வட்டார விளையாட்டு போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மேஜைபந்து போட்டியில் முதலிடமும், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மேஜைபந்து போட்டியில் 2-ம் இடமும், 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கேரம் போட்டியில் முதல் மற்றும் 2-ம் இடமும் பெற்றனர்.
எறிபந்து போட்டியில் 2-ம் இடமும், 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில் முதலிடமும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் முதலிடமும், 14, 17 வயதிற்கு உட் பட்டோருக்கான ஆக்கி போட்டியில் முதலிடமும் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர்.
வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற 50 மாணவிகளுக்கு கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை விளையாட்டு சீருடைகளை வழங்கினார்.
சாதனை படைத்த மாணவிகளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, உதவி தலைமை ஆசிரியர் கண்ணன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்துமுருகன், உடற்கல்வி இயக்குனர் காளிராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, லட்சுமி, அந்தோணியம்மாள், தனபாலன் ஆகியோர் பாராட்டினார்கள்.
-------------