கிருஷ்ணகிரி, ஓசூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட முயற்சி-168 பேர் கைது
ஓசூர், கிருஷ்ணகிரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட முயன்றதுடன், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 168 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
பா.ஜனதாவினர் முற்றுகையிட முயற்சி
சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதனத்தை அழிப்போம் என பேசியதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக்கோரியும், அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா. ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓசூர் மலைமீதுள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இதற்கு மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் ஓம் வரவேற்றார். இதில் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மாநில தொழில்துறை பிரிவு செயலாளர் கே.ராமலிங்கம், மாநில வர்த்தக பிரிவு துணைத்தலைவர் சுதா நாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பிராமணர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்தும், அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பட்டன. பின்னர் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றும், கீழே தரையில் அமர்ந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
110 பேர் கைது
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட, 12 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கைதான அனைவரும் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில், அரசு கருவூலம் எதிரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
இதேகோரிக்கையை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சிவபிரகாஷ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்த கட்சியினர் குவிந்தனர்.
ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லையென கூறி அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். ஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏன் அனுமதி இல்லை எனக்கூறிய பா.ஜனதாவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஒரு சிலர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றினர். இதில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி, பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் முருகேசன், நகர தலைவர் சங்கர் உள்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர்.