தியாகதுருகத்தில் வளர்ச்சி திட்டங்களை பேரூராட்சிகளின் ஆணையர் திடீர் ஆய்வு
தியாகதுருகத்தில் வளர்ச்சி திட்டங்களை பேரூராட்சிகளின் ஆணையர் திடீர் ஆய்வு சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகத்தில் சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக விளக்கூர் சாலையில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவினை ஆய்வு செய்த அவர் அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறதா?, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ததோடு பூங்காவை முறையாக பராமரிக்கும்படி அதிகாரிகளிடம் கூறினார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறை, பாப்பான்குளம் தெருவில் உள்ள சமுதாய கழிவறை ஆகியவற்றை ஆய்வு செய்த பேரூராட்சிகளின் ஆணையர் அவற்றை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பேவர் பிளாக் சாலை மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் பேரூராட்சி அருகே குளம் தூர்வாரும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் பஸ் நிறுத்தம் அருகே பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாத சமுதாய கூடத்தை ஆய்வு செய்து அதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது கடலூர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், கடலூர் மண்டல கண்காணிப்பாளர் மூவேந்திர பாண்டியன், செயல் அலுவலர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் சீனிவாசன், பேரூராட்சி தலைவர் வீராசாமி, இளநிலை உதவியாளர் கொளஞ்சியப்பன், துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ், கணினி உதவியாளர் முத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.