நாகூரில், விற்பனைக்காக குவியும் செம்மறி ஆடுகள்


நாகூரில், விற்பனைக்காக குவியும் செம்மறி ஆடுகள்
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 6:45 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூரில் விற்பனைக்காக செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம்

நாகூர்:

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூரில் விற்பனைக்காக செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பக்ரீத் பண்டிகை

இறைவனின் கட்டளையை ஏற்று தன் மகனை தியாகம் செய்ய துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த பக்ரீத் பண்டிகையின் போது ஏழை எளியோருக்கும் இஸ்லாமியர்கள் குர்பானி வழங்குவது வழக்கம்.

இதற்காக சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி (வியாழன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

செம்மறி ஆடுகள்

இதற்காக அறந்தாங்கி, பேராவூரணி, புதுக்கோட்டை, ஆர்.எஸ்.மங்களம் ஆகிய இடங்களில் இருந்து வியாபாரிகள் நாகூருக்கு விற்பனைக்காக 5000-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஒரு ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிக கிலோ உள்ள செம்மறி ஆடுகள் ரூ.20 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது.

லாபம் கிடைக்காது

இதுகுறித்து ஆடு வியாபாரி சித்திக் கூறுகையில்:- பக்ரீத் பண்டிகையையொட்டி நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் விற்பனைக்காக செம்மறி ஆடுகளை வாங்கி வருவோம். பக்ரீத் பண்டிகை தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே சென்று விடுவோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு செம்மறி ஆடுகள் விலை அதிகமாக இருந்தது.

கடந்த 1 வருடத்தில் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை செம்மறியாடுகள் விலை அதிகமாக காணப்பட்டது. வாகன வாடகை, ஆட்கள் கூலி போன்றவை இருப்பதால் எங்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்காது என்றார்.


Next Story