உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x

மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

பவானிசாகர்

மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள மீன்களை கடந்த பல ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஏலம் எடுத்து மீன்களை பிடித்து விற்பனை செய்து வந்தனர். அப்போது மீன்களைப் பிடிக்கும் மீனவர்களுக்கு ஒரு கிலோ மீனுக்கு ரூ.55 கூலியாக கொடுத்தனர். இந்த நிலையில் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமையை தனியாருக்கு ஏலம் கொடுக்கக்கூடாது என்று மீனவர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். மேலும் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.

அதிர்ச்சி

அதன்படி கோர்ட்டும் மீனவர்கள் சங்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் தனியாருக்கு ஏலம் விடப்பட்ட காலம் முடிவடைந்து உள்ளது. இதனால் நேற்று முதல் பவானிசாகர் அணையில் நீர்த்தேக்க பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பாக மீன்கள் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட மீன்களுக்கு கிலோ ரூ.35 மீனவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

முற்றுகை

இதன்காரணமாக தாங்கள் பிடித்த மீன்களுடன் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் மீனவர்கள் கூறுகையில், 'தனியார் ஏலம் எடுத்து நடத்தியபோது மீன்களுக்கு ஒரு கிலோ ரூ.55 கூலியாக வழங்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு மீன்களுக்கு கிலோ ரூ.35 வழங்கப்படுகிறது. எங்களுக்கும் உரிய கூலியை நிர்ணயம் செய்து அதிகாரிகள் வழங்கவேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story