வடசித்தூரில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மயிலந்தீபாவளியை கொண்டாடிய பொதுமக்கள்
வடசித்தூரில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மயிலந்தீபாவளியை ஏராளமான பொதுமக்கள் கொண்டாடினர்.
நெகமம்
வடசித்தூரில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மயிலந்தீபாவளியை ஏராளமான பொதுமக்கள் கொண்டாடினர்.
மயிலந்தீபாவளி கொண்டாட்டம்
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வடசித்தூர், செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை 'மயிலந்தீபாவளி' என்று அழைக்கிறார்கள்.
இந்த கிராமத்தில் இந்துக்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் குடும்பத்தினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் உறவினர்கள் போல் பழகி வருவதால் ஆண்டு தோறும் மயிலந்தீபாவளியில் முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாடப்பட்டது. இதற்கு அடுத்த நாள் அதவாது நேற்று செவ்வாய்க்கிழமை அன்று வடசித்தூர், செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம், ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மயிலந்தீபாவளியை கொண்டாடினார்கள்.
திருவிழா கோலம் பூண்டது
இதற்காக வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ராட்டினங்கள் உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், இனிப்பு, பலகார கடைகள், வளையல் கடைகள், அமைக்கப்பட்டு ஊரே திருவிழா கோலம் பூண்டு காணப்பட்டது. வடசித்தூர் பகுதியில் வசித்து வரும் இந்து, முஸ்லிம் மக்கள் ஒற்றுமை உணர்வுடன் மயிலந்தீபாவளியை கொண்டாடி மத்தாப்பூ, பட்டாசு, சரவெடி வெடித்து மகிழ்ந்தார்கள்.
வடசித்தூர் கிராமத்தில் திருமணமாகி சென்ற பெண்கள் புகுந்த வீட்டில் தீபாவளியை கொண்டாடிவிட்டு தாய் வீட்டில் நடக்கும் மயிலந்தீபாவளிக்கு விருந்தினராக வந்து இருந்தனர். இதேபோல் இந்த ஊரை சேர்ந்த முஸ்லிம்கள் வெளியூர்களில் வசித்து வந்தாலும் அவர்கள் இந்த பண்டிகைக்காக குடும்பத்துடன் வடசித்தூருக்கு வந்து விடுவார்கள். வடசித்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரண்டு வருவதால் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மயிலந்தீபாவளி கொண்டாடப்பட்டதால் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
மேலும் மயிலந்தீபாவளியை முன்னிட்டு நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து வடசித்தூர் கிராம மக்கள் கூறியதாவது;- மயிலந்தீபாவளி 160 ஆண்டுகளுக்கும் மேலாக நமது வடசித்தூரில் கொண்டாட பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மயிலந்தீபாவளி கொண்டாடவில்லை. இதனால் இந்த ஆண்டு மயிலந்தீபாவளிக்கு நாங்கள் முன் கூட்டியே தயாராகி இருந்தோம். எங்களது குழந்தைகளுக்கு மயிலந்தீபாவளியை கொண்டாடுவதென்றால் மிகுந்த மகிழ்ச்சி. ஊர்கூடி ஒன்றாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவதை இங்குதான் பார்க்கமுடியும். இது எங்களது கிராமத்திற்கு கிடைத்த மிகப்பெருமையாக கருதுகிறோம். இங்கு வசிக்கும் முஸ்லிம் மக்களும் நாங்களும் சகோதரர்களாக பழகி வருகிறோம். இதனால் அவர்கள் எங்களுடன் இணைந்து இந்த பண்டிகையை கொண்டாடுவது கூடுதல் மகிழ்ச்சி.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.