பெரம்பலூரில் தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனை
தொடர்ந்து விலையேற்றத்தினால் பெரம்பலூரில் தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
ஏமாற்றமே மிஞ்சியது
காய்கறி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, இந்த மாத தொடக்கத்தில் ரூ.100 வரை பெரம்பலூரில் விற்பனை செய்யப்பட்டது. நாளைடைவில் தக்காளி விலை குறையும் என்ற எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. நேற்று பெரம்பலூர் உழவர் சந்தையில் தக்காளி கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.150-க்கும், தினசரி காய்கறி மார்க்கெட்டில் ரூ.180-க்கும் விற்பனையானது.
விலையை குறைக்க...
மளிகை கடைகளில் கிலோ ரூ.200-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர். ஓட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி சூப் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தக்காளி விலையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தக்காளியை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் கூட்டுறவுத்துறை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.