புதுச்சேரியில், தி.மு.க. கொடி உயர பறக்கும்
புதுச்சேரியில் தி.மு.க. கொடி உயர பறக்கும் என்று மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
புதுச்சேரியில் தி.மு.க. கொடி உயர பறக்கும் என்று மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது என்கிற மருதமுத்து வரவேற்றார்.
மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலத்தில் மாநாடு
சேலத்தில் வருகிற டிசம்பர் 17-ந்தேதி நடக்கும் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டில் 5 லட்சம் பேரை திரட்டுவோம் என்று தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாக்கு கொடுத்துள்ளேன். எனவே இளைஞர் அணியினர் குடும்பத்துடன் மாநாட்டுக்கு வர வேண்டும். இனி கட்சி கூட்டங்களில் யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம். அதற்கு பதிலாக புத்தகம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். சேலம் மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும். எப்படி மாநாடு நடக்க கூடாதோ அப்படி ஒரு மாநாடு மதுரையில் நடந்துள்ளது. அந்த மாநாட்டில் கொள்கை பற்றியோ, வரலாறு குறித்தோ எதுவும் பேசப்படவில்லை.
குடும்பக்கட்சி என்று விமர்சனம்
தற்போது பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தி.மு.க.வை குடும்பக்கட்சி என்று விமர்சனம் செய்கிறார். பிரதமர் மோடிக்கு அனைத்துமே அதானி தான். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வையும்,, பா.ஜ.க.வையும் தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும். புதுச்சேரியிலும் தி.மு.க. கொடி உயர பறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் நாஜிம் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., திருப்பட்டினம் நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் கல்யாணம், அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் காரைக்கால் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகமதுரியாஸ் நன்றி கூறினார்.