உப்புக்கோட்டையில்பொதுமக்கள் சாலை மறியல்


உப்புக்கோட்டையில்பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

உப்புக்கோட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

உப்புக்கோட்டையில் 25 வயது வாலிபர் ஒருவர் தேனி-குச்சனூர் ரோட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ் டிரைவர் சத்தமாக ஒலி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பஸ்சின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைக்கண்ட மற்றொரு தரப்பினர் அங்கு வந்து அந்த வாலிபரை சத்தம் போட்டனர்.

இதையடுத்து டிரைவர் பஸ்சில் இருந்து இறங்கி வந்து அவர்களுடன் சேர்ந்து வாலிபரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் டிரைவர் வாலிபரின் மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்து சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அந்த வாலிபர் தனது நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்தார். பின்னர் அங்கு இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த தரப்பை சேர்ந்தவர்கள் தேனி-குச்சனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தரப்பினரிடமும் முறையாக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஒரு தலைபட்சமாக செயல்படக்கூடாது என்று அவர்கள் கூறினர். வழக்குபதிவு செய்யக்கூடாது என்று கூறினர் பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story