ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளஜிப்சத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக மூடப்பட்டு உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த ஆலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் ஜிப்சம் பொருளை அகற்றவும், ஆளில்லா பசுமை வளாகத்தை பராமரிக்கவும், பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியில் உள்ள கரையை பலப்படுத்தவும் உச்சநீதிமன்றம் கடந்த 10-ம் தேதி வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அதற்கான அனுமதியை விரைவாக அளிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக திறக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. தற்காலிகமாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜிப்சம் அகற்றவும், பசுமை வளாகத்தை பாதுகாக்கவும் உடனடி அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு உடனடி அனுமதி அளித்தால் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கூறி உள்ளனர்.