தமிழகத்தில் சீருடை அணியாமல் மக்கள் பணி செய்கிறேன்
தமிழகத்தில் சீருடை அணியாமல் மக்கள் பணி செய்கிறேன்
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பயோனியர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவ- மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அண்ணாமலை பதிலளித்து பேசினார். அப்போது மாணவ-மாணவிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
மாணவ- மாணவிகள்:- நீங்கள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவதற்கு தூண்டுதலாக இருந்தது யார்? உங்களின் சாதனையாக எதை கருதுகிறீர்கள்? ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பு ஏற்ற நீங்கள் ஏன் தமிழகத்தில் பணியாற்றவில்லை? எத்தனை ஆண்டுகள் போலீஸ் துறையில் பணியாற்றினீர்கள்?
அண்ணாமலை:- நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருவதற்கு தூண்டுதலாக இருந்தது எனது வாழ்க்கையில் நான் சந்தித்த நேர்மையான மனிதர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தான். கர்நாடகாவில் 9 ஆண்டுகள் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியுள்ளேன். கர்நாடகாவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய போது மக்களுக்கு சீருடை அணிந்து பணியாற்றினேன். தற்போது தமிழகத்தில் சீருடை அணியாமல் மக்கள் பணி செய்து வருகிறேன். நான் பிறந்தது ஒரு குக்கிராமமாகும். அங்கு 30-க்கு குறைவான வீடுகள் இருந்தது. ஆடு, மாடுகள் விவசாயம் என அந்த வாழ்க்கை சூழலில் வளர்ந்தவன் நான். இந்த விழா மேடையில் நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு நான் உயர்ந்திருப்பதை சாதனையாக கருதுகிறேன். எல்லோருக்குள்ளும் ஒரு கெட்ட குணம் இருக்கும். நாம் நம்மையே சுய பரிசோதனை செய்து நல்ல குணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மனிதனுக்கு தனித்தனி திறமைகள் உண்டு அந்த திறமைகளை நாம் கண்டறிந்து வெளிக்கொண்டு வரவேண்டும். எல்லோரிடமும் தலைமை பண்பு உள்ளது. தலைமை பண்பு என்பது விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அனைவரையும் சமமாக கருத வேண்டும். அனைவரையும் மதிக்க தெரிந்திருக்க வேண்டும். இதுவே தலைமை பண்பாகும், என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பயோனியர் குழும நிறுவனங்களின் தலைவர் குமாரசாமி, பள்ளி தாளாளர் லதா குமாரசாமி உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.