பா.ஜனதா ஆட்சியில் இந்தியா வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறி உள்ளது:நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.


பா.ஜனதா ஆட்சியில் இந்தியா வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறி உள்ளது:நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 7 Jun 2023 1:42 AM GMT)

பா.ஜனதா ஆட்சியில் இந்தியா வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறி உள்ளதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரத்து 389 கோடிக்கு மேலாக சிறு வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தங்கநாற்கர சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. குடிசை வீடுகள் இல்லாத நிலையை பிரதமர் உருவாக்கி இருக்கிறார். பொருளாதார ரீதியில் உலகிலேயே 5-வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. அமெரிக்காவில் கூட நிதி நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்தியா வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறி உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 3-வது இடத்துக்கு வரும் சூழல் உள்ளது.

முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வதை யாரும் விமர்சிக்க முடியாது. வெளிநாடு சென்று எவ்வளவு முதலீடுகளை ஈர்த்து உள்ளார், எவ்வளவு வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளார் என்ற தகவல்கள் இருந்தால், அதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் சரியான முதலீடு இல்லை என்றால், அதனை வரவேற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, மாநில துணைத்தலைவர்கள் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ, சசிகலாபுஷ்பா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் பா.ஜனதா ஆட்சியின் 9 ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறுவது தொடர்பாக மாவட்ட, மண்டல நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.


Next Story