கொலை வழக்கில் வாலிபர் நெல்லை கோர்ட்டில் சரண்
சென்னையில் நடந்த கொலை வழக்கில் வாலிபர் ஒருவர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரும், அவருடைய நண்பர்கள் ஆற்காடு சுரேஷ், மாது மற்றும் அமல்ராஜ் ஆகியோரும் கடந்த 18-ந்தேதி சென்னையில் உள்ள கோர்ட்டுக்கு சென்று விட்டு சாப்பிடுவதற்காக ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் வந்து, ஆற்காடு சுரேசை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அதை தடுக்க முயன்ற மாதுவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஆற்காடு சுரேஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மாது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மோகன், சென்னை மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நெல்லை முன்னீர்பள்ளம் அம்மன் கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சங்கரலிங்கம் (வயது 24) என்பவர், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக நெல்லை 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு விஜயராஜ் குமார் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார். அவரை வருகிற 7-ந்தேதி வரை சிறையில் அடைக்கவும், 7-ந்தேதி சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.