தொழில் அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


தொழில் அதிபர் கொலை வழக்கில்   மேலும் ஒருவர் கைது
x

மணமேல்குடி அருகே தொழில் அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வெளிநாடு தப்பிச்சென்றவரை போலீசார் வரவழைத்து நடவடிக்கை எடுத்து 17 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை

மணமேல்குடி:

தொழில் அதிபர் கொலை வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஜாம் (வயது 54). தொழில் அதிபரான இவரை கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி இரவு மர்மநபர்கள் கொலை செய்து, அவரது மனைவியை கட்டிப்போட்டு பெட்டகத்தில் இருந்த 170 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழில் அதிபர் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் தொழில் அதிபர் கொலையில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கடந்த 24-ந் தேதி கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 62 பவுன் நகைகளை மீட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, கையுறைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த நிலையில் முகமது நிஜாம் கொலை வழக்கில் மணமேல்குடி அருகே வீச்சூரை சேர்ந்த ஜோஸ்மில்டன் (வயது 25) தொடர்புடையவர் என்பதும், அவர் சம்பவம் நடந்த ஓரிரு நாளில் துபாய் தப்பிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய தூதரகம் மூலம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஜோஸ்மில்டனை திரும்ப தாயகம் வரவழைப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து துபாயில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னைக்கு அவர் வரவழைக்கப்பட்டார். அங்கிருந்து அவரை கைது செய்து போலீசார் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 17 பவுன் நகைகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைதான அவரை அறந்தாங்கி மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

தொழில் அதிபர் கொலை-கொள்ளை வழக்கில் 9 பேரும் கைது

மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தில் தொழில் அதிபர் முகமது நிஜாம் கொலை செய்யப்பட்டதில் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு முதலில் பெரும் சவாலாக இருந்தது. ஆனால் படிப்படியாக அவர்களுக்கு துப்பு துலங்கியது. இதில் செல்போன் அழைப்புகள் வைத்து விசாரித்ததில் கிடைத்த சிறு துரும்பை அப்படி நூல்பிடித்து சங்கிலி தொடராக இருந்தவர்களை கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட 170 பவுன் நகைகளில் இதுவரை 79 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 91 பவுன் நகைகள் மீட்கப்பட வேண்டி உள்ளது. இந்த வழக்கில் கைதான யூனுசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story