மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெருந்துறை
விநாயகர் சதுர்த்தியைெயாட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். பின்னர் அந்த சிலைகள் நீர்நிலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படும்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு பகுதிகளில் 1,008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூைஜ நடைபெற்றது.
பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 22 விநாயகர் சிலைகள், பொதுமக்கள் சார்பில் 11 விநாயகர் சிலைகள் என மொத்தம் 33 விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதில் பெருந்துறையை அடுத்த சீனாபுரம் ஆயிக்கவுண்டன்பாளையத்தில் 8 அடி உயர விநாயகர் சிலையும், பெருந்துறை பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை முனியப்பன் கோவில் வளாகத்தில் 7 அடி உயர விநாயகர் சிலையும், சீனாபுரம் செல்லாண்டியம்மன் கோவில் அருகே 5 அடி உயர விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.
சத்தியமங்கலம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் ரங்கசமுத்திரம், கடைவீதி, கோட்டுவீரம்பாளையம், வடக்குப்பேட்டை, வன்னியர் வீதி, சின்ன வீதி உள்பட 75 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
குறிப்பாக சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில் பால விநாயகர் கோவில் அருகே 12 அடி உயர விநாயகர் சிலையும், சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவில் அருகே இந்து முன்னனி சார்பில் 10 அடி உயர விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சிலைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. சந்திப்பில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. ஊர்வலம் வடக்குப்பேட்டை பகுதியை வந்தடைந்ததும், அங்கு இந்து முன்னணி அமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும். பின்னர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணி அளவில் பவானி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.
கோபி- அந்தியூர்
கோபி, சிறுவலூர், கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 180 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு விநாயகரை வழிபட்டனர்.
அந்தியூர், தவுட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 41 இடங்களில் 5 அடி முதல் 10 அடி உயரம் வரையான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
கொடுமுடி
விநாயகர் சதுர்த்தியையொட்டி கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 13 விநாயகர் சிலைகளும் ஊர் பொதுமக்கள் சார்பில் 11 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாளை (புதன்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.