முதற்கட்டமாக 4 லட்சம் பெண்கள் விண்ணப்பம்


முதற்கட்டமாக 4 லட்சம் பெண்கள் விண்ணப்பம்
x
தினத்தந்தி 6 Aug 2023 2:15 AM IST (Updated: 6 Aug 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற கோவையில் முதற்கட்டமாக 4 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

கோயம்புத்தூர்
கோவை


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற கோவையில் முதற்கட்டமாக 4 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர்.


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இல்லத்தரசி களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான விண்ணப்ப பதிவு முகாம் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.


கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 43 ஆயிரத்து 875 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகளுக்கு 1,401 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன.


ரேஷன் கார்டுகள்


இதில் முதற்கட்டமாக 839 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 6 லட்சத்து 34 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு முகாம் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.


இதையொட்டி ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வழங்கினர். அதில் எந்த தேதியில், எந்த நேரத்தில் முகாமிற்கு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


விண்ணப்பம்


கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முடிந்த முதற்கட்ட முகாமின்படி இதுவரை 4 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்து உள்ளனர்.


இது குறித்து மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப் பிக்க 839 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. இதில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 898 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். இது 63.7 சதவீதம் ஆகும்.


கோவை வடக்கு, வால்பாறை


இதில் அதிகபட்சமாக வால்பாறை தாலுகாவில் 77.3 சதவீத பெண்களும், ஆனைமலை தாலுகாவில் 73 சதவீத பெண்களும் விண்ணப்பித்து உள்ளனர்.


குறைந்தபட்சமாக கோவை வடக்கு தாலுகாவில் 54 சதவீத பெண்களும், கோவை தெற்கில் 58.5 சதவீத பெண்களும் விண்ணப்பித்து உள்ளனர். பொள்ளாச்சியில் 70 சதவீதம் பேரும், மேட்டுப்பாளையத்தில் 70.6 சதவீத பெண்களும் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து உள்ளனர். மாநகர் பகுதிகளை காட்டிலும் ஊரக பகுதியில் உள்ள பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற அதிகமாக விண்ணப்பித்து உள்ளனர்.


2-ம் கட்ட முகாம்


2-ம் கட்டமாக 562 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கான விண்ணப்பதிவு முகாம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமிற்கு வரும் பெண்களுக்கு உதவ ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


இவ்வாறு அவர் கூறினார்.


Next Story