போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர் புகார்


போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர் புகார்
x
தினத்தந்தி 27 July 2023 12:30 AM IST (Updated: 27 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர் புகார்

கோயம்புத்தூர்

கோவை

போலி ஆடியோ வெளியிட்டு அவதூறு பரப்புவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம், தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் புகார் மனு அளித்தார்.

சமூக வலைத்தளங்களில் வைரல்

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருப்பவர் நா.கார்த்திக். இந்த நிலையில் இவர் பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் தி.மு.க. மூத்த அமைச்சர்கள் மற்றும் மேயர் உள்ளிட்டோரை விமர்சித்து பேசுவதாக இருந்தது. இதனால் தி.மு.க.வினர் இடையே பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், இந்த ஆடியோவிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், போலி ஆடியோவை தயார் செய்து தன் மீது சிலர் அவதூறு பரப்புவதாக தெரிவித்து கோவை மாநகர் போலீஸ் கமிஷனரிடம் நேற்று நா.கார்த்திக் புகார் மனு அளித்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:-

பதவி

நான் கடந்த 1981-ம் ஆண்டு பள்ளியில் படித்து கொண்டிருந்த நாள் முதல் தி.மு.க.வில் மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்துள்ளேன். மாநகராட்சி துணை மேயர், எம்.எல்.ஏ. உள்ளிட்ட பதவிகளையும் வகித்து உள்ளேன். முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் மிகவும் பொறுப்புடன் நடந்து பணியாற்றி வருகிறேன்.

தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், கொள்கைக்கும் குந்தகம் ஏற்படாமல் தி.மு.க. தொண்டர்களையும், பொதுமக்களையும் அரவணைத்து செயல்படுகிறேன். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது என் மீது பொய்யாக 39 வழக்குகள் போட்டனர். அந்த வழக்குகளை சட்ட ரீதியாக சந்தித்து வருகிறேன்.

எனது மேற்படி பணிகளை கண்டு பொறாமைப்பட்டு சில சமூக விரோதிகள் நான் பேசியதாக போலி ஆடியோவை தயார் செய்து வதந்தி பரப்ப வெளியிட்டுள்ளார்கள். இந்த பொய்யான அவதூறான ஆடியோவை வெளியிட்ட சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போலீசாரிடம் புகார் அளித்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story