பல்பொருள் அங்காடியில்மேற்கூரையை உடைத்து கொள்ளை
சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). இவர், தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் சேர்ந்து அம்மாப்பேட்டை ரவுண்டானா அருகில் பல்பொருள் அங்காடி கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஊழியர்கள் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு சென்றார்கள். நேற்று காலை கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது, பல்பொருள் அங்காடியின் மேற்கூரை பிரிந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் வினோத்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து கடைக்கு உள்ளே சென்று பார்த்தார். கல்லா பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது. இதனால் கொள்ளையடித்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.