அதிக வருவாய் ஈட்டும் பட்டியலில் கோவை ரெயில் நிலையத்துக்கு 3-வது இடம் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தல்


அதிக வருவாய் ஈட்டும் பட்டியலில்  கோவை ரெயில் நிலையத்துக்கு 3-வது இடம்  கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தல்
x

தென்னக ரெயில்வேயில் அதிக வருவாய் ஈட்டி கொடுக்கும் ரெயில் நிலையங்களின் பட்டியலில் கோவை ரெயில் நிலையம் 3-வது இடம் பிடித்தது. கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தென்னக ரெயில்வேயில் அதிக வருவாய் ஈட்டி கொடுக்கும் ரெயில் நிலையங்களின் பட்டியலில் கோவை ரெயில் நிலையம் 3-வது இடம் பிடித்தது. கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவைக்கு 3-வது இடம்

தென்னக ரெயில்வேயில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் கோவை ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் கடந்த 1861-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கிருந்து சென்னை, புதுடெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் கோவை ரெயில் நிலையத்திற்கு தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். தென்னக ரெயில்வேக்கு அதிக வருவாய் ஈட்டி கொடுக்கும் நகரங்களில் கோவையும் ஒன்றாகும்.

கடந்த 2021-2022-ம் ஆண்டில் தென்னக ரெயில்வேயில் அதிக வருவாய் கிடைக்கும் முதல் 25 ரெயில் நிலையங்களின் பட்டியலை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சென்னை சென்டரல் முதலிடத்திலும், சென்னை எக்மோர் 2-வது இடத்திலும், கோவை 3-வது இடத்திலும் உள்ளது. கடந்த ஒராண்டில் ரெயில்வேக்கு சென்டரல் ரெயில் நிலையம் மூலம் ரூ.637 கோடியும், எக்மோர் ரெயில் நிலையம் மூலம் ரூ.323 கோடியும், கோவை ரெயில் நிலையம் மூலம் ரூ.159 கோடியும் வருவாய் கிடைத்து உள்ளது. இது கோவையில் இருந்து புறப்படும் ரெயில்களுக்கு மட்டுமே. எனவே கோவை ரெயில் நிலையத்தில் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து உள்ளது. இதுகுறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-

திருச்செந்தூர் ரெயில்

தென்னக ரெயில்வேயில் கடந்த 2021-2022-ம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டி கொடுக்கும் ரெயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சென்னை சென்டரல் முதலிடத்திலும், எக்மோருக்கு 2-வது இடமும், கோவை 3-வது இடமும், தாம்பரம் 4-வது இடமும், மதுரை 5-வது இடத்திலும் உள்ளது. தென்னக ரெயில்வே கட்டுபாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா பகுதிகள் வருகிறது. இதில் முதல் 5 இடங்களையும் தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களே பிடித்து உள்ளன. திருவனந்தபுரம் 6-வது இடமும், பாலக்காடு 15-வது இடத்திலும் உள்ளன.

ஆனால் தமிழகத்தில் கூடுதலாக ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் ரெயில் இயக்குவதால் ரெயில்வேக்கு நஷ்டம் ஏற்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்கள் வெளியானது. இந்த ரெயில் நஷ்டத்தில் இயங்குவதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கினால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ரெயில்வே பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூர் ரெயிலை இயக்க பரிசீலனை செய்யவில்லை. மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருக்கும் போது பொள்ளாச்சியில் ரெயில்வே பராமரிப்பு பணிமனை இருந்தது. தற்போது இந்த பணிமனையை பாலக்காடு நகர ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கூடுதலாக ரெயில் இயக்கலாம்

கவுண்டம்பாளையம், போத்தனூர் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பராமரிப்பு பணிமனை அமைக்க போதிய வசதிகள் உள்ளன. எனவே கோவை ரெயில் நிலையத்தில் செயல்படும் ரெயில்வே பராமரிப்பு பணிமனை மேற்கண்ட ஏதாவது ஒரு ரெயில் நிலையங்களுக்கு மாற்றலாம். இதன் மூலம் கோவை ரெயில் நிலையத்தில் நடைமேடைகளை அதிகப்படுத்தி கூடுதலாக ரெயில்களை நிறுத்த வசதி ஏற்படுத்த முடியும். இதனால் கோவையில் இருந்து மற்ற நகரங்களுக்கு கூடுதலாக ரெயில் இயக்க முடியும். போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல் வரை ரூ.1500 கோடி செலவில் அகலரெயில் பாதையாக மாற்றுதல், மின் மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால் பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் ஒரு நிரந்தர ரெயில் கூட இயக்கவில்லை.

கோவை ரெயில் நிலையம் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தூத்துக்குடி, நெல்லை, ராமேசுவரம், சென்னைக்கு ரெயில் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பரிசீலனையில் எடுத்துக் கொள்ளவில்லை. மேற்கண்ட ரெயில்களை இயக்கினால் ரெயில்வேக்கு மேலும் கூடுதலாக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேலம் ரெயில்வே கோட்டம் புதிதாக ரெயில்களை இயக்க பரிந்துரை செய்தும் தென்னக ரெயில்வே நிராகரித்து விட்டது. எனவே கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் சென்னை எக்மோர், காட்பாடி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய ரெயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு ரூ.1800 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இதேபோன்று கோவை ரெயில் நிலையத்திற்கும் நிதி ஒதுக்கி மறுசீரமைப்பு செய்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story