தாய் இறந்த சோகத்தில் தீக்குளித்த சிறுமி சிகிச்சை பலனின்றி சாவு
தா.பழூர் அருகே தாய் இறந்த சோகத்தில் தீக்குளித்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சிறுமி தீக்குளிப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ஆனந்தஜோதி. இவர்களுடைய மகள் செல்வி (வயது 17). இந்தநிலையில் உடல்நல கோளாறு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தஜோதி சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்வி கடந்த சில மாதங்களாக தாய் நினைவாக சோகத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த செல்வி திடீரென வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதில், உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி செல்வி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தாய் இறந்த சோகத்தில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.