தேனி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 37 ஆயிரத்து 468 பேர் எழுதினர்


தேனி மாவட்டத்தில்  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 37 ஆயிரத்து 468 பேர் எழுதினர்
x

தேனி மாவட்டத்தில் 166 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 37 ஆயிரத்து 468 பேர் எழுதினர்

தேனி

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு இன்று நடந்தது. தேனி மாவட்டத்தில் 166 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

இந்த தேர்வை எழுத 44 ஆயிரத்து 195 பேர் ஹால்டிக்கெட் பெற்று இருந்தனர். அவர்களில் 37 ஆயிரத்து 468 பேர் தேர்வு எழுதினர். அனுமதி பெற்றிருந்தவர்களில் 6 ஆயிரத்து 727 பேர் தேர்வு எழுதவில்லை.

அனுமதி மறுப்பு

காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதில் பங்கேற்க காலை 7 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வரத்தொடங்கினர். 9 மணிக்கு தேர்வு அறைக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கூடலூரில் அமைக்கப்பட்ட மையத்தில் 9 மணிக்கு பிறகு வந்த பெண்கள் உள்பட 15 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அதில் சிலர் கண்ணீர்விட்டு அழுத படி திரும்பி சென்றனர்.

தேனி என்.ஆர்.டி. நகரில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளி திவாகரன் என்பவர் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார். இந்த தேர்வு பணியில் 166 ஆய்வு அலுவலர்கள், 166 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2,206 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

ஆய்வு

தேனியில் உள்ள தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்து தேர்வு நடைமுறைகளை பார்வையிட்டார். அதுபோல், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க அமைக்கப்பட்ட 20 பறக்கும் படையினர் மையங்களில் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.


Next Story