தேனியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்:96 பேர் கைது


தேனியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்:96 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:31+05:30)

தேனியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் 96 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

ஏ.ஐ.டி.யூ.சி. போராட்டம்

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில், 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்ட தொகுப்பாக சுருக்கிய மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி தேனி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டத்துக்காக நிர்வாகிகள் தேனி பள்ளிவாசல் தெருவில் திரண்டனர்.

போராட்டத்துக்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ரவிமுருகன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

96 பேர் கைது

பின்னர் அவர்கள் அங்கிருந்து நேரு சிலை சிக்னல் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அப்போது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, விலைவாசியை குறைக்க வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும், கட்டிடம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு நலவாரிய நிதிகளை உயர்த்தி பதிவுக்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து நேரு சிலை சிக்னல் பகுதியில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 96 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story