திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில்வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் சனிக்கிழமை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று(சனிக்கிழமை) முதல் 2 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.
ஆதார் எண் இணைப்பு
தேர்தல்களில் வாக்குப்பதிவு நாளன்று முறைகேடுகளை தடுக்க, ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியை கடந்த ஆக.1-ந் தேதி முதல் தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து நாடுமுழுவதும் இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனையின் பேரில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
திருச்செந்தூர், ஏரல்
இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூர், ஏரல் தாலுகாக்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமில் இதுவரை இந்த பணியை மேற்கொள்ளாத வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்று, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும் என திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலரும், திருச்செந்தூர் தாசிதாருமான வாமணன் தெரிவித்துள்ளார்.