அரசு பள்ளியை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர்


அரசு பள்ளியை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர்
x

அரசு பள்ளியை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினர்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் சனாதனம் பற்றி முகநூலில் பதிவிட்ட தலைமையாசிரியரை கண்டித்து இந்து முன்னணியினர் அரசு பள்ளியை முற்றுகையிட முயன்றனர். எம்.எல்.ஏ.-மேயர் சம்பவ இடத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகையிட முயற்சி

திருப்பூர் சாமுண்டிபுரம், செல்லம்மாள்காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமையாசிரியராக கணேசன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று அண்ணா பிறந்தநாளையொட்டி கணேசன் தனது முகநூல் பக்கத்தில் சனாதனம் பற்றி பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்தை படித்த பா.ஜனதா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த ஒருசிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் கணேசன் அந்த பதிவை முகநூலில் இருந்து அகற்றி விட்டார்.

ஆனால் சனாதனம் குறித்து அரசு பள்ளிதலைமையாசிரியர் தவறாக பதிவிட்டுள்ளதாக கூறி அந்த பள்ளியை முற்றுகையிடுவதற்காக இந்து முன்னணி அமைப்பின் நகர பொதுப்செயலாளர் சுரேந்தர் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனர் அபிஷேக் குப்தா, கொங்குநகர் சரக உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்து முன்னணி அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பரபரப்பு

இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் ந.தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. மு.நாகராசன் மற்றும் தி.மு.க.வினர் அப்பகுதியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சிக்காக அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது, பள்ளியை முற்றுகையிடுவதாக கூறி இந்து முன்னணியினர் பள்ளி அருகே திரண்டிருந்ததை கண்டு காரில் இருந்து இறங்கி சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தனர். அவர்களிடம் போலீசார் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறினார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக ஒரே நேரத்தில் தி.மு.க. மற்றும் இந்து முன்னணி தரப்பினர் ஒரே இடத்தில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து போலீசார் இந்து முன்னணியினரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தி.மு.க.வினரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story