திருவாரூரில், மீண்டும் பனங்கிழங்கு விற்பனை மும்முரம்


திருவாரூரில், மீண்டும் பனங்கிழங்கு விற்பனை மும்முரம்
x

திருவாரூரில் மீண்டும் பனங்கிழங்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. 10 கிழங்குகள் கொண்ட 1 கட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருவாரூர்


திருவாரூரில் மீண்டும் பனங்கிழங்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. 10 கிழங்குகள் கொண்ட 1 கட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பனங்கிழங்கு

'கற்பக தரு' என்று அழைக்கப்படுகின்ற பனை மரம் இயற்கை, மனித குலத்துக்கு கொடுத்த அரிய கொடையாகும். அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது பனை மரம்.. பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பதனீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை காக்கும் மருத்துவ குணம் வாய்ந்த ஊட்டச்சத்து உணவாகும். பனங்கிழங்கை பொறுத்தவரை பல மருத்துவ குணங்கள் உள்ளன.

இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும்.

விற்பனை மும்முரம்

வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நேரத்தில் அதிகஅளவில் பனங்கிழங்குகள் விற்பனைக்கு வந்தது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பனங்கிழங்கு விற்பனை சிறிது மங்கியது. இந்த நிலையில் திருவாரூரில் மீண்டும் பனங்கிழங்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

ரூ.50-க்கு விற்பனை

திருவாரூரில், புதிய பஸ் நிலையம் அருகே கும்பகோணம் சாலை, மன்னார்குடி சாலையில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் பனங்கிழங்கு விற்பனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவிக்காத 12 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கும், அவித்த 10 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கும் விற்பனையாகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு போதிய அளவு பனங்கிழங்கு சாகுபடி நடக்காததால் பொங்கல் பண்டிகையையொட்டி அதிக விலைக்கு விற்பனையானது.

தேவை ஏற்பட்டதால் விலையை பொருட்படுத்தாமல் கிழங்கை மக்கள் வாங்கி சென்றனர். தற்போது பண்டிகை முடிந்துவிட்டது தேவை குறைந்துள்ளது. இதனால் விலையை குறைத்து விற்பனை செய்யும் நிலைக்கு வந்துவிட்டோம். விலையை குறைத்து விற்பதால் லாபம் இல்லாமல், சம்பளம் மட்டுமே கிடைக்கிறது என்றனர்.


Next Story