தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இடங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இடங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 2:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இடங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இடங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மருத்துவ முகாம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட அளவில் இரண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி உடன்குடி கிறிஸ்டியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி, எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடக்கிறது. உடன்குடியில் நடைபெறும் முகாமில், உடன்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் பகுதியை சார்ந்த பொதுமக்களும், எட்டயபுரத்தில் நடைபெறும் முகாமில் எட்டயபுரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பரிசோதனைகள்

இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இருதய எக்கோ மற்றும் இ.சி.ஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளுடன் முழு ரத்தபரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்படும். இதயநோய் பிரிவு, பொதுமருத்துவம், பொதுஅறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், எலும்பியல் மருத்துவம், குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு, தோல் நோய் சிகிச்சை பிரிவு, நரம்பியல் மருத்துவம், சிறுநீரக சிகிச்சை பிரிவு, நுண்கதிர் துறை, பல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படும். இதனுடன் சித்தமருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்படும்.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும் தகுதியான நபர்களுக்கு முகாமிலேயே முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story