தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்


தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில்  புதிய வாக்காளர் சேர்ப்பு பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2023 தேதியை அடிப்படையாக கொண்டு புதிய வாக்காளர் சேர்க்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிஎண்கள் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது, இடமாற்றம் செய்வது, இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக வெளியூரில் உள்ள வாக்காளர்களை நீக்கம் செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியாக உள்ள புதிய வாக்காளர்களை அவசியம் சேர்க்க வேண்டும். புதியதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, ஆதார் விவரம் சேர்ப்பதற்கு 6பி, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, எழுத்துப்பிழை, முகவரி மாற்றம் செய்தல் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு படிவம் 8 பூர்த்தி செய்து 09.11.2022 முதல் 08.12.2022 வரை வாக்குச் சாவடி மையங்கள் அல்லது வாக்காளர் சேர்ப்பிற்கான தாசில்தார் அலுவலகத்தில் வழங்கலாம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக புதிய வாக்காளர் சேர்த்தல், இடம் மாறுதல், நீக்கம் செய்தல் போன்ற பணிகளை செய்வதற்கு தேர்தல் ஆணையம் நவம்பர் 12, 13 மற்றும் 26, 27ஆகிய 4 நாட்கள் சிறப்புமுகாம் நடத்த உள்ளது. இந்த முகாம்களை பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பு மற்றும் இதர பணிகளில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள் ஆகியோர் இணைந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story