தூத்துக்குடியில்புத்தக திருவிழாவுக்கு பஸ்சில் பயணம் செய்த கனிமொழி எம்.பி.


தூத்துக்குடியில்புத்தக திருவிழாவுக்கு பஸ்சில் பயணம் செய்த கனிமொழி எம்.பி.
x

தூத்துக்குடியில் புத்தக திருவிழாவுக்கு பஸ்சில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் பயணம் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் புத்தக திருவிழாவுக்கு இலவச பஸ்சில் கனிமொழி எம்.பி. பயணம் செய்தார்.

புத்தக திருவிழா

தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் புத்தகத் திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் மக்களை கவரும் விதமாகவும், புத்தகங்கள் விற்பனை மற்றும் வாசிப்பு தன்மையை அதிகரிக்கும் விதமாகவும் தினமும் ஒரு முக்கிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதே போன்று வருகிற 28-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை நெய்தல் கலைத்திருவிழா நடக்கிறது. இந்த விழாவில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

பஸ்சில்...

இந்த புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையங்களில் இருந்து புத்தக திருவிழா நடைபெறும் திடலுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து நேற்று மாலையில் கனிமொழி எம்.பி தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு இருந்து புத்தக திருவிழா நடைபெறும் திடலுக்கு பஸ்சில் மக்களுடன் புறப்பட்டு சென்றார். அப்போது பஸ்சில் பயணித்த மக்களுடன் உரையாடினார். புத்தக திருவிழா குறித்து விளக்கி கூறி, அனைவரும் விழாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அவருடன் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோரும் பஸ்சில் பயணம் செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி புத்தக திருவிழா நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

கச்சேரி

மேலும் வருகிற 28-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை மண்சார்ந்த கலைஞர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொள்ளும் நெய்தல் கலைத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முத்துநகர் கடற்கரையில் சென்னையை சேர்ந்த இசைக்கலைஞர்கள் நடத்திய இசைக்கச்சேரி நடந்தது. இதில் கடற்கரையில் கடலை ஒட்டிய பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு படகில் நின்று இசைக்கலைஞர்கள் கச்சேரியை நடத்தினர். இதனை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இசைக்கச்சேரியை கண்டு ரசித்தனர்.


Related Tags :
Next Story