தூத்துக்குடியில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
தூத்துக்குடியில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முகாம்
தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் தூத்துக்குடி மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 14-ந் தேதி காலை 9 மணிக்கு கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஐடிஐ-யில் தொழிற்பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்), பட்டயம் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் என அனைவரும் உரியஅசல் சான்றிதழ்கள் மற்றும் தக்கஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.
முன்னுரிமை
மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை முன்னனி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித் தொகை மாதம் ரூ.7 ஆயிரத்து 700 முதல் ரூ.10 ஆயிரம் வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற் பழகுநர் சட்டம் 1961-ன்படி, இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவும் நல் வாய்ப்பு கிடைக்கும். மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ள வேண்டும.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.