தூத்துக்குடியில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
பெட்டிக்கடை
தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை தெருவை சேர்ந்தவர் அலியாஸ். இவரும், மகன் அந்தோணி ஞானபிரகாசும் சேர்ந்து அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் சவுந்தரபாண்டி (வயது 23), என்பவர் அந்த பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கிவிட்டு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அலியாசின் மகன் அந்தோணி ஞானபிரகாஷ் (37) என்பவர் சவுந்தரபாண்டியிடம் சிகரெட்டுக்கு பணத்தை கேட்டாராம்.
இதில் ஆத்திரம் அடைந்த சவுந்தரபாண்டி தனது நண்பர்கள், தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வேல்முருகன் மகன் செல்வபெருமாள் என்ற கட்டபெருமாள் (21), தூத்துக்குடி ரகுமத்துல்லாபுரம் ராமநாதன் மகன் கோபி (22), தூத்துக்குடி எஸ்.எஸ் பிள்ளை தெரு செல்லப்பா மகன் ராசையா என்ற கலாம் (21) ஆகிய 4 பேருடன் சேர்ந்து மேற்படி அந்தோணி ஞானபிரகாஷிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
கைது
அவர்களிடம் இருந்து தப்பிய அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பெரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து செல்வபெருமாள், கோபி ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட செல்வபெருமாள் மீது ஏற்கனவே கொலைமிரட்டல் உள்பட 5 வழக்குகளும், கோபி மீது திருட்டு உள்ளிட்ட 7 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.