தூத்துக்குடியில்ரெயிலில் பாய்ந்து பெண் தற்கொலை


தூத்துக்குடியில்ரெயிலில் பாய்ந்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரெயிலில் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மகனுடன் ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்து காணப்பட்ட பெண் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மகனுடன் பிரச்சினை

திருச்சி மாவட்டம் விராலிமலை தாலுகாவை கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி கலாவதி (வயது 53). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்துக்கு வந்தார். அங்கு உள்ள தனது மகனுடன் வசித்து வந்தாராம். இந்த நிலையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக கடந்த 1½ மாதமாக தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள தனது தங்கை வீட்டில் வசித்து வந்தாராம். அப்போது அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். மேலும் அவர் மனவருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ரெயிலில் பாய்ந்து தற்கொலை

நேற்று காலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்று உள்ளார். பின்னர் அவர் தூத்துக்குடி-மீளவிட்டான் ரெயில் நிலையங்களுக்கு இடையே காட்டுப்பகுதியில் உள்ள தண்டவாளத்துக்கு சென்று உள்ளார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைப்பதற்காக சிறப்பு ரெயில் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. அந்த ரெயில் முன்பு கலாவதி பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story