வால்பாறையில் வரி வசூலிக்க வந்த நகராட்சி பணியாளர்கள் சிறைபிடிப்பு-அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
வால்பாறையில் வரி வசூலிக்க வந்த நகராட்சி பணியாளர்கள் சிறைபிடித்ததோடு, அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் வரி வசூலிக்க வந்த நகராட்சி பணியாளர்கள் சிறைபிடித்ததோடு, அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடைகளுக்கு சீல் வைப்பு
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் நகராட்சி வரிவசூல் பிரிவு பணியாளர்கள் மூலம் வரி வசூலிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள 348 கடைக்காரர்களில் பணம் கட்டத்தவறிய கடைக்காரர்களிடம் கடை வாடகை வசூலிக்கும் பணிக்காக நகராட்சி வரிவசூல் பிரிவு பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது நடப்பு ஆண்டு வரி, ஏற்கனவே கட்ட வேண்டிய வரிபாக்கி ஆகியவைகளை கட்டுமாறு பணியாளர்கள் கேட்டுள்ளனர்.
மேலும் வரிபாக்கி உள்ள 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
பணியாளர்கள் சிறைபிடிப்பு
தொடர்ந்து மற்ற கடைக்காரர்களிடம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கி களை கட்டவேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று நகராட்சி பணியாளர்கள் தெரிவித்து கடைகளை பூட்டி சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப் போது மார்க்கெட் பகுதி கடைக்காரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை பூட்டி சீல் வைக்கவிடாமல் நகராட்சி பணியாளர்களை சிறைபிடித்து கடைக்கு முன்னால் அமரவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், நகராட்சி ஆணையாளர் இங்கு வரவேண்டும். நகராட்சி கடைக்காரர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், கவுன்சிலர் வீரமணி ஆகியோர் சம்பவஇடத்திற்கு வந்து கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வாக்குவாதம்
அப்போது நகராட்சி மார்க்கெட் பகுதி கடைக்காரர்கள், நகராட்சி மார்க்கெட் பகுதியில் கழிப்பிட வசதியில்லை, மழை காலங்களில் கடைகள் முழுவதும் மழைநீர் ஒழுகிக் கொண்டிருக்கிறது. பல கடைகளுக்கு மின் இணைப்பு வசதியில்லை. எந்த ஒரு நகராட்சி கடைகளையும் முழுமையாக பராமரிப்பு செய்துதர வில்லை. கடை வாடகையை கட்ட வரும் போது அதிகாரிகள் இருப்பதில்லை. கடை வாடகை அதிகமாக உள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுத்தால் அதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் பாலு, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கடைபராமரிப்பு, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது, வெளியூர் வியாபாரிகளை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை இன்று (புதன்கிழமை) முதல் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும். எனவே வருகிற 10 நாட்களுக்குள் அனைவரும் கடை வாடகைகளை கட்டிவிட வேண்டும் என்று ஆணையாளர் பாலு கூறினார்.
இதைத் தொடர்ந்து கடைக்காரர்கள் கலைந்து சென்றனர். கடை வாடகை வசூலுக்கு வந்த நகராட்சி பணியாளர்களை சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.