விழுப்புரம் மாவட்டத்தில் திறன் போட்டிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


விழுப்புரம் மாவட்டத்தில் திறன் போட்டிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் திறன் போட்டிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் திறன் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், 47-வது சர்வதேச அளவிலான திறன் போட்டிகள் வருகிற 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்சில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் திறன் போட்டியில் பங்குபெறும் வகையில் தகுதிவாய்ந்த போட்டியாளர்களை தேர்வு செய்யும் விதமாக மாவட்ட அளவில் திறன் போட்டிகள் ஜூலை மாதம் 15-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 55 திறன் போட்டிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட அளவில் விண்ணப்பிக்க வருகிற 7-ந் தேதி கடைசி நாளாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 70 கல்லூரிகளில், தற்போது வரை கலை மற்றும் அறிவியில் கல்லூரியை சேர்ந்த 47 மாணவ, மாணவிகளும், பொறியியல் கல்லூரியை சேர்ந்த 10 மாணவ, மாணவிகளும், தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த 9 மாணவ, மாணவிகளும் நான் முதல்வன் இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் மாணவ, மாணவிகள் பதிவு செய்திடும் வகையில், தேவையான விழிப்புணர்வு பணிகளை கல்லூரி முதல்வர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் நடராஜன், மகாத்மாகாந்தி திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக தேசிய உறுப்பினர் ஓம்பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story