விளாத்திகுளம் பகுதியில் தகுதிச்சான்று இல்லாமல் இயங்கிய 3 வாகனங்கள் பறிமுதல்
விளாத்திகுளம் பகுதியில் தகுதிச்சான்று இல்லாமல் இயங்கிய 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பகுதியில் தகுதிச்சான்று இல்லாமல் இயங்கிய மினிவேன் உள்ளிட்ட 3 வாகனங்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் மற்றும் அலுவலர்கள் விளாத்திகுளம் பகுதியில் நேற்று வாகன சோனையில் ஈடுபட்டனர். அப்போது தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட ஆட்டோ, தண்ணீர் டேங்க் மினி லாரி, மினி வேன் ஆகிய 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த பகுதியில் அதிக பாரத்துடன் சாலை வரி செலுத்தாமலும், அனுமதி சீட்டு இல்லாமலும் வந்த டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. மேலும், சாலை வரி செலுத்தாத வாகன உரிமையாளர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 100-ம், டிப்பர் லாரி உரிமையாளருக்கு ரூ.77 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு உரிய சாலைவரியை உடனடியாக செலுத்துமாறும், உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்கக்கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில், பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், வேன், சுற்றுலா வேன் போன்ற வாகனங்கள் சிறப்பு அனுமதி சீட்டு பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என அவர் தெரிவித்தார்.