வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரம்


வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரம்
x

தினத்தந்தி செய்தி எதிரொலியாக வயலோகத்தில் சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதுக்கோட்டை

குண்டும், குழியுமான சாலை

அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தில் இருந்து முதலிப்பட்டி வேளாம்பட்டி, ஆலவயல், காந்துப்பட்டி, கானத்தம்பட்டி வழியாக புல்வயல் செல்லும் 5 கிலோ மீட்டர் சாலை உள்ளது. இந்த சாலை பகுதியில் பள்ளிகள், அங்கன்வாடிகள், கோவில்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டையில் இருந்து இந்த கிராமங்கள் வழியாக மேலத்தானியத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று வந்தது.

இந்த பஸ்சில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் சென்று வந்தனர். இந்த சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் அவ்வழியாக சென்ற அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்கள் சிரமம்

இதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு 5 கிலோ மீட்டர் சாலையில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்தது. இந்த சாலை புதுப்பிக்கும் பணி முடிந்தால் பிரச்சினை சீராகிவிடும் என அப்பகுதி பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் பொதுமக்களுக்கு வேதனையே தந்தது. சாலைகள் அமைக்கப்பட்டும் சாலை ஓரத்தில் மண் அணைக்கப்படாததால் நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப் படவில்லை.

மேலும் அந்த வழியாக லாரியோ அல்லது பள்ளி, கல்லூரி பஸ்கள் வந்தால் எதிரே சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்லும் மாணவர்கள். பொதுமக்கள் சாலையை விட்டு கீழே இறங்கிதான் செல்ல வேண்டும். இதனால் பலமுறை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கீழே விழுந்து காயம் அடையும் சம்பவமும் நடந்து வருகிறது. மேலும் சாலை ஓரத்தில் ஒருபக்கம் குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

பொதுமக்கள் நன்றி

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறிய கருத்துக்களுடன் கடந்த வாரம் தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து உடனடியாக சாலையின் இருபுறங்களிலும் மண் கொட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி கூறினர்.


Related Tags :
Next Story