வி.ஐ.டி.யில் பாவேந்தர் இலக்கிய மன்ற தொடக்க விழா
வி.ஐ.டி.யில் பாவேந்தர் இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.
வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய மன்ற தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி இலக்கிய மன்ற மாணவ பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக உலகத் தமிழர் பேரவை நிறுவனர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,'' ஜனநாயக மாண்புகளை காத்த ஜி.விசுவநாதன் அரசியலில் இருந்து ஒதுங்கி வி.ஐ.டி பல்கலைக்கழகத்தை தொடங்கிய போது நாங்கள் எல்லாம் உண்மையிலேயே வருத்தப்பட்டோம். ஆனால் இப்போது ஆசியாவிலேயே மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக வி.ஐ.டி பல்கலைக்கழகம் திகழ்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
நீங்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு தூய தமிழில் பெயர் வையுங்கள். அது பாவேந்தர் பாரதிதாசனுக்கு பெருமை சேர்க்கும். தமிழ் மொழி தொன்மையான மொழி என்பது தொல்லியல் சான்றுகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும். ஒன்றுபட்டு வாழ்ந்தால் எதிர்காலம் உண்டு'' என்றார்.
விழாவில் தலைமை தாங்கிய வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகையில், ''சிறப்பு விருந்தினராக வந்துள்ள பழ.நெடுமாறன் மாணவர் பருவத்தில் இருந்தே மக்களுக்காக போராடியவர். தமிழ்நாட்டில் சேலம், கோவையை தவிர அனைத்து சிறைகளிலும் இருந்துள்ளார். 60 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இந்திரா காந்தி ஒரு முறை வந்த போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட இருந்தது. அதனை முறியடித்து அவரை காப்பாற்றியவர் பழ.நெடுமாறன். அதனாலேயே அவர் பழ. நெடுமாறனை என்னுடைய மகன் என கூறுவார்.
தமிழ் இயக்கத்தின் சார்பில் தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழை கற்பிக்க உதவி செய்து வருகிறோம். மாணவர்களும் தமிழ் இயக்கத்தில் சேர வேண்டும். எல்லா மொழிகளையும் நேசிப்போம். தமிழை சுவாசிப்போம்'' என்றார்.
விழாவில் வி.ஐ.டி துணைத் தலைவர்கள் ஜி.வி.செல்வம், சங்கர் விசுவநாதன் உள்பட பலர் பேசினர். முடிவில் மரிய செபஸ்தியான் நன்றி கூறினார்.