முடிவுற்ற 5 திட்டப்பணிகள் திறப்பு விழா
மேல்விஷாரம் பகுதியில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பிரான்சா மேடு பகுதியில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், கீழ்விஷாரம் குளத்துமேடு பகுதியில் உள்ள நல்லதண்ணீர்குளம் கலைஞர்நகர் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு பூங்காவுடன் அமைக்கப்பட்டுள்ளதையும், அண்ணாசாலை கீழ்விஷாரம் குளத்துமேடு பஸ் நிறுத்தத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்கூடம், வார்டு எண்:4 வாத்தியார் தெருவில் உள்ள பூங்கா மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் வசதியுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளதையும், அண்ணா சாலை கத்தியவாடி பஸ் நிறுத்தத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்கூடத்தையும் ஆக மொத்தம் ரூ.95 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவும், குழந்தைகளின் பயன்பாட்டுக்காவும் திறந்து வைத்தார்.
இதில் தொழில் அதிபர் சவுகார்முன்னா, மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுபாஷினி, நகர மன்ற துணைத் தலைவர் குல்சார் அஹமத், நகராட்சி பொறியாளர் கோபு, நகர மன்ற உறுப்பினர்கள் உதயகுமார், நஜீமின், உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.