பொள்ளாச்சியில் மீண்டும் காந்தி சிலை திறப்பு
பொள்ளாச்சியில் மீண்டும் காந்தி சிலை திறக்கப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் மீண்டும் காந்தி சிலை திறக்கப்பட்டது.
ரவுண்டானா அமைக்கும் பணிகள்
பொள்ளாச்சி நகரில் ரூ.34 கோடியே 51 லட்சம் செலவில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நகரின் மைய பகுதியில் பொள்ளாச்சியில் தமிழிசை சங்கம் சார்பில் கடந்த 1985-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி காந்தி சிலை அமைக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு சாலை விரிவாக்க பணிக்காக காந்தி சிலை அகற்றப்பட்டது. மேலும் சிலையை பத்திரமாக தாலுகா அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் முழுமையாக முடியாததால் காந்தி சிலையை மீண்டும் அமைப்பதில் தாமதமானது. இந்த நிலையில் மீண்டும் காந்தி சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து நகராட்சியில் அனுமதி பெற்று மீண்டும் காந்தி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாலை அணிவித்து மரியாதை
இதை தொடர்ந்து காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று காந்தி சிலை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், போலீஸ் துணை சூப்பிரண்டு தீபசுஜிதா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி. கோபாலகிருஷ்ணன் மற்றும் சிவில் என்ஜினீயரிங் அசோசியேசன் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காந்தி சிலை திறக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பிறந்தநாளை ஒட்டி அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் உட்பட பலரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.