தஞ்சை பூக்குளத்தில் அரசு நெல் கொள்முதல்நிலையம் திறப்பு


தஞ்சை பூக்குளத்தில் அரசு நெல் கொள்முதல்நிலையம் திறப்பு
x
தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக தஞ்சை பூக்குளம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல் மணிகள் தேக்கம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். தற்போது முன்பட்ட குறுவை அறுவடைசெய்யப்பட்டு வருவதால் ஆங்காங்கே அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.தஞ்சை கரந்தை பூக்குளம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து குவியல், குவியலாக கொட்டி வைத்தனர். அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை இதனால் அறுவடை செய்து 10 நாட்களுக்கு மேலாகியும் நெல்மணிகளை நேரடி கொள்முதல் நிலையங்களில் வைத்து பாதுகாத்து வந்தனர்.

தினத்தந்தி செய்தி எதிரொலி

மழை மற்றும் வெயில் காரணமாகவும், ஆடு மாடுகள் வந்து தின்பதாலும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நெல்லை வெயிலில் காய வைக்கவும், பின்னர் அதனை குவியலாக குவித்து வைக்கவும் என தினமும் ரூ.500 வரை விவசாயிகள் செலவு செய்து வந்தனர். மேலும் நெல்லை தார்ப்பாய்கொண்டும் மூடி பாதுகாத்து வந்தனர். இது தொடர்பான செய்தி 'தினத்தந்தி"யில் நேற்று முன்தினம் படத்துடன் வெளியானது.இதையடுத்து 'தினத்தந்தி' செய்தி எதிரெலி காரணமாக நேற்று நெல் கொள்முதல் திறக்க நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் தொடங்கினர. நெல் கொள்முதல் பணிகளை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதையடுத்து உடனடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டதால், தினத்தந்தி நாளிதழுக்கும், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கும் விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story