ரூ.6½ கோடியில் கருணாநிதி நூற்றாண்டு பல்கலைக்கழக நகர வளாகம் திறப்பு விழா
ரூ.6½ கோடியில் கருணாநிதி நூற்றாண்டு பல்கலைக்கழக நகர வளாகம் திறப்பு விழா நடந்தது.
பாளையங்கோட்டை- சீவலப்பேரி ரோட்டில் கீழநத்தம் கிராமத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமம் அமைந்துள்ளது. இங்கு ரூ.6½ கோடி செலவில் கருணாநிதி நூற்றாண்டு பல்கலைக்கழக நகர வளாகம் கட்டப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் பல்கலைக்கழக நகர வளாகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நெல்லை பல்கலைக்கழக நகர வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர்கே.ஆர்.ராஜூ, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
கருணாநிதி நூற்றாண்டு பல்கலைக்கழக நகர வளாக கட்டிடத்தில் 15 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம், 14,440 சதுர அடியில் முதல் தளம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு 12 வகுப்பறைகள், 2 விருந்தினர் அறைகள், 2 பணியாளர்ள் அறை மற்றும் பதிவு அறை, அலுவலக அறை, கணிணி அறை, காத்திருக்கும் அறை, இயக்குனர் அறை, கருத்தரங்கு அறை, தேர்வு அறை அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த வளாகம் மாணவ-மாணவிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.