அரசு கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு:உபகரணங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
அரசு கல்லூரி புதிய கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில் உபகரணங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
அரசு கல்லூரி புதிய கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில் உபகரணங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய கட்டிடம் திறப்பு
பொள்ளாச்சியில் பகுதி மக்கள் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த 2017-amp;ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. மேலும் சமத்தூர் ராம ஐய்யங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஒரு பகுதியில் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே பள்ளி வளாகத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு நிதி ரூ.7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரமும், பொள்ளாச்சி எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதி ரூ.1 கோடியும் சேர்த்து ரூ.8 கோடியே 95 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு கடந்த 2019-amp;ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூன் முதல் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி, அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. கல்லூரிக்கு தரைதளம் உள்பட 3 தளங்களுடன் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. 36 அறைகள் கட்டப்பட்டு உள்ளன. பணிகள் ஒராண்டுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன் புதிய கட்டிடம் திறக்கப்பட்டு, அங்கு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் போதிய உபகரணங்கள், குடிநீர் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
குடிநீர் வசதி
பொள்ளாச்சி அரசு கல்லூரியில் சுமார் 900 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் உபகரணங்கள் இல்லாத காரணத்தால் புதிய கட்டிடம் திறப்பது தள்ளி போனது. இதற்கிடையில் தற்போது அதே வளாகத்தில் செயல்படும் பள்ளியில் இருந்து தற்காலிகமாக உபகரணங்கள் வாங்கப்பட்டு, புதிய கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது. எனவே அரசு கல்லூரிக்கு புதிதாக கூடுதலாக உபகரணங்களை வழங்க வேண்டும். மேலும் குடிநீர் வசதி ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாவது:-
புதிய கட்டிடத்தில் 2 கணினி ஆய்வகங்கள், ஒரு நூலகம், கருத்தரங்கம், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உள் அரங்கம், வகுப்பறைகள், முதல்வர், பேராசிரியர்கள் அறை மற்றும் மாணவிகளுக்கு ஓய்வறை, நவீன கழிப்பிட வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டு உள்ளன.ஏற்கனவே புதிதாக உபகரணங்கள் கல்லூரிக்கு வாங்கப்பட்டு உள்ளது. தற்போது பள்ளியில் இருந்தும் உபகரணங்கள் பெறப்பட்டு புதிய கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது. விரைவில் தேவையான உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடிநீர் தேவைக்கு தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே இருந்த பழைய கட்டிடத்தில் இருந்தும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், பி.காம். சி.ஏ., பி.காம். பி.ஏ., பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகள் மட்டும் தான் உள்ளன. எனவே கூடுதலாக பாடப்பிரிவுகளை தொடங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.