கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்திடவும், பாரம்பரிய நெல் விதைகளை இனத்தூய்மையுடன் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவித்து உற்பத்தியை பெருக்கிட பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் 10 விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் தலா ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

எனவே பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத்தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபு சார்ந்த நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத்திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வயல்களில் உரிய அளவில் சாகுபடி செய்ய வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும். பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்காக அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பெற்று பயனடையலாம் மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொிவித்துள்ளார்.

1 More update

Next Story