தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. சுருளி அருவிக்கு ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து நீர் வரத்து உள்ளது.

தற்போது ஹைவேவிஸ் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஏரிகளும் நிரம்பி வருகிறது. தூவனம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உவரி நீரும், மலைப்பகுதிகளில் பெய்கின்ற மழை நீரும் சேர்ந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த மலைப்பகுதி வழியாக பல்வேறு மூலிகைச் செடிகளில் கலந்து சுருளி அருவியில் தண்ணீர் அருவியாக கொட்டுகிறது.

இதில் குளித்தால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சுருளி அருவிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளும் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக,தேனி,மற்றும் அண்டை மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதே நேரத்தில் அருவியில் நீர்வரத்து குறைந்தால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story