தா.பழூரில் தொடர் மழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன


தா.பழூரில் தொடர் மழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன
x

தா.பழூரில் பெய்து வரும் தொடர் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. இதனால் நெல்மணிகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

அரியலூர்

சம்பா சாகுபடி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்து உள்ளனர். பொன்னார் பிரதான பாசன வாய்க்காலின் முகப்பு பகுதியில் மண்மேடு ஏற்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் அவ்வப்போது சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவ்வப்போது அதிகாரிகள் அதனை சரி செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கினர்.

இந்த ஆண்டு சம்பா பருவ விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு சரியான நேரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர் மழை

இந்நிலையில் திடீரென 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராகும் சூழ்நிலையில் உள்ள நெல் வயல்களில் நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்து விட்டன. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் நெல்மணிகளை அறுவடை செய்ய முடியவில்லை. இது விவசாயிகளிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான போராட்டத்தின் முடிவில் நல்ல விளைச்சலை அறுவடை செய்யும் சூழ்நிலையில் தற்போது மழை பெய்ய துவங்கி இருப்பது விவசாயிகளிடையே பேரிடியாய் இறங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் உற்பத்தியான நெல்மணிகள் வயலிலேயே முளைத்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். ஏற்கனவே அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல் எடுக்க முடியாமல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று கூறுவார்கள். அறுவடை செய்த நெல்மணிகளில் செலவுத்தொகை முழுவதையும் எடுக்க முடிந்தாலும், முடியாவிட்டாலும் வைக்கோல் மட்டுமே விவசாயிகளுக்கான லாபமாக கருதப்படும். அந்த வகையில் வைக்கோலையும் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

அறுவடை செய்ய முடியவில்லை

வாழைக்குறிச்சியை சேர்ந்த விஜயகுமார்:- வயலில் அடியோடு சாய்ந்து கிடக்கும் நெல்மணிகளை அறுவடை செய்வதற்கு முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்தால் வயலிலேயே நெல்மணிகள் முளைத்து விடும். ஒருவேளை மழை நின்று விட்டால் கூட தற்போது உள்ள சூழ்நிலையில் அறுவடை எந்திரங்கள் மூலம் சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்களை அறுக்க முடியாது. இவற்றை அறுவடை செய்வதற்கு கூலி தொழிலாளிகள் மூலம் முயற்சி செய்வதும் அதிகப்படியான செலவையே கொடுக்கும். சேற்றில் இறங்கி இயங்கும் வகையில் உள்ள பல் சக்கரம் பொருந்திய அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்தால் கூடுதல் செலவு பிடிக்கும். அப்படியே செய்தாலும் கால்நடைகளுக்கு வழக்கமாக பயன்படும் வைக்கோலை பயன்படுத்த முடியாத வகையில் வீணாகிவிடும். ஒருவேளை பல் சக்கரம் உள்ள அறுவடை எந்திரத்தை பயன்படுத்தினால் நெல் வயல்களில் அதிகளவு மேடு பள்ளங்கள் ஏற்படும். அடுத்த போகம் விவசாயம் செய்வதற்கு இதனால் ஏற்படும் மேடு பள்ளங்களை சரி செய்யும் செலவும் அதிகமாகும். மொத்தத்தில் இந்த போகம் விவசாயம் செய்ததில் நேற்று வரை இருந்த மகிழ்ச்சி இன்று இல்லை.

நிவாரணம்

அன்னங்காரம்பேட்டையை சேர்ந்த சக்திவேல்:- ஆரம்பத்தில் இருந்தே சம்பா பருவத்தில் தண்ணீர், உரம் கிடைக்காமல் அவதியடைந்து வந்தோம். ஆனாலும் கடுமையான உழைப்பின் பலனாய் நல்ல விளைச்சல் ஏற்பட்டிருந்தது. கதிர் பிடிக்கும் பருவத்தில் மழை பெய்ததால் பதர்நீரை முளைத்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அது கூட இல்லாமல் நல்ல விளைச்சல் இருந்ததனால் மகிழ்ச்சியாகவே இருந்தோம். இப்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்மணிகளை அறுவடை செய்து எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யாமல் விட்டுவிட்டால் ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம். தற்போது பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் மற்றும் கூடுதல் செலவுகளை கருத்தில் கொண்டு அதிகாரிகள் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்மணிகளை எந்தவிதமான நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story