உடையார்பாளையத்தில் தொடர் மழை; முந்திரி விவசாயிகள் கவலை


உடையார்பாளையத்தில் தொடர் மழை; முந்திரி விவசாயிகள் கவலை
x

உடையார்பாளையத்தில் தொடர் மழை பெய்து வருவதால் முந்திரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அரியலூர்

தொடர் மழை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அரியலூர், உடையார்பாளையம், கழுமங்கலம், முணியத்தரியான்பட்டிணம், கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூசையப்பர்பட்டிணம், இடையார், ஏந்தல், வானத்திரியான்பட்டிணம், ஒக்கநத்தம், பிலிச்சிக்குழி, காடுவெட்டாங்குறிச்சி, சோழங்குறிச்சி, பருக்கல், வெண்மான்கொண்டான், சுத்தமல்லி, ஆதிச்சனூர், நாச்சியார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் முந்திரி தோப்பில் உள்ள முந்திரி கொட்டைகளை பறிக்க முடியாமலும், பறித்த முந்திரி கொட்டைகளை வெயிலில் காயவைத்து உலர்த்த முடியாமலும் விவசாயிகள் அவதியடைந்தனர்.

பயிர் காப்பீடு

மேலும் முந்திரி மரத்தில் இருந்து கீழே விழும் முந்திரி கொட்டைகள் ஈரம் அதிகமாக இருப்பதால் சேதமாக வாய்ப்பு உள்ளது. இந்த நிலை நீடித்தால் முந்திரி கொட்டைகள் அதிக விலை போகாது. முந்திரி விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு முந்திரி சாகுபடி காலங்களில் பயிர் காப்பீடு செய்து தரவேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story