தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரி சோதனை


தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரி சோதனை
x

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். பாதுகாப்புக்கு போலீசாரை அழைத்து செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் 'டாஸ்மாக்' மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய திட்டம் வகுத்து வந்துள்ளனர்.

அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அசோக்குமார் என்பவரின் பங்களா வீட்டிலும் சோதனை நடந்தது.

இதே போன்று கரூர், கோவை ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட அரசு ஒப்பந்ததாரர்களின் இல்லம் மற்றும் அலுவலகங்கள் உள்பட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மொத்தம் 40 இடங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை வளையத்துக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகாரிகள் வாகனம் உடைப்பு

இந்த நிலையில் கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர். இதனால் செய்வதறியாமல் அதிகாரிகள் திகைத்தனர். அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலையை உணர்ந்துக்கொண்டு சோதனையை கைவிட்டு திரும்பி சென்றனர். பின்னர் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் இது போன்று சோதனை நடத்த செல்லும் இடங்களுக்கு பாதுகாப்புக்காக போலீசாரை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றைய சோதனையை போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் ரகசியமாக மேற்கொள்ள முயன்றதால் இந்த அசம்பாவித சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசாரை அழைத்து செல்லாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகை, வாகனம் உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து மற்ற இடங்களில் நடைபெற்ற சோதனைக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் பல இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையும், அதிகாரிகள் வாகனம் தாக்கப்பட்ட விவகாரமும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சோதனை யார்-யார் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்றது. எத்தனை இடங்களில் நடந்தது என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் வருமான வரித்துறை தரப்பில் இருந்து வெளியிடவில்லை. சோதனை முழுவதும் முடிவடைந்த பின்னரே உறுதியான தகவல் வருமான வரித்துறை தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று காலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில் தனது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தார்.


Next Story