நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு வருமான வரி இன்றியமையாதது


நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு வருமான வரி இன்றியமையாதது
x
தினத்தந்தி 13 Dec 2022 7:00 PM GMT (Updated: 13 Dec 2022 7:00 PM GMT)

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு வருமான வரி இன்றியமையாதது என்று விழிப்புணர்வு கூட்டத்தில் வருமான வரி கூடுதல் ஆணையர் மைக்கேல் ஜெரால்டு பேசினார்.

தேனி

விழிப்புணர்வு கூட்டம்

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் வருமான வரித்துறை சார்பில் முன்கூட்டிய வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) செலுத்துவது தொடர்பாக வியாபாரிகள், தொழில் அதிபர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு வருமான வரி கூடுதல் ஆணையர் மைக்கேல் ஜெரால்டு தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

ஒரு ஆண்டின் வருவாயை முன்கூட்டியே கணித்து, வருமான வரியை தவணை முறையில் செலுத்துவது முன்கூட்டிய வரி என்று அழைக்கப்படுகிறது. இது பல நாடுகளிலும் புழக்கத்தில் உள்ளது தான். முந்தைய வரிவிதிப்பு முறையில் மொத்த வரியையும், ஆண்டின் இறுதியில் மொத்தமாக செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அது வணிகர்களுக்கு பெரும் சுமையாக இருப்பதாக கருத்து எழுந்தது. யாருடைய வருமான வரி ரூ.10 ஆயிரத்தை தாண்டுகிறதோ அவர்கள் அனைவரும் முன்கூட்டிய வரி செலுத்த வேண்டும்.

4 தவணையாக வரி

தொழில்முனைவோரின் சுமையை குறைக்கும் வகையில் இந்த வரியை 4 தவணைகளில் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டிய வரியால் ஒட்டுமொத்தமாக எவ்வளவு வரி கிட்டும் என்பதை அரசால் கணிக்க முடிகிறது. அதற்கு ஏற்ப செலவினங்களை திட்டமிட முடிகிறது. எனவே, தொழில் முனைவோர் அனைவரும் தங்களின் தொழிலை திறம்பட ஆய்வு செய்து முன்கூட்டிய வரியை துல்லியமாக கணித்து, குறிப்பிட்ட தவணை நாளுக்கு முன்பாக செலுத்தி பயன்பெறலாம்.

வணிக நிறுவனங்களுக்கு எப்படி சி.சி.டி.வி. கேமரா பாதுகாப்பானதோ, அதேபோல், வணிகர்களில் தொழிலுக்கு முன்கூட்டிய வரி பாதுகாப்பானது. எல்லோருடைய பணப் பரிவர்த்தனையும் கவனிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார நிலை ஆரோக்கியமாக இருக்க சரியான நேரத்தில் வரி செலுத்த வேண்டும். நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு வருமான வரி இன்றியமையாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் கே.எஸ்.கே.நடேசன், தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் செல்வக்குமார், மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.


Next Story